Monday, July 27, 2009

வயோதிகம்

என் கவிதைகளுக்கு
முகவரியாய் இருந்தவள்.
இன்று அவள் முகத்தில் வரிகள்...

Sunday, July 19, 2009

கொலுசும் - புல்லாங்குழலும்

பல முறை அந்த ஆற்றை பேருந்தில் நான் கடந்து சென்றுள்ளேன்.சிறிய ஆறு,அது என் ஊர் எல்லையில் இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அந்த ஆற்றை பேருந்தில் கடக்கும் போதும், அது ஏதோ ஒன்று சொல்ல வருவதை போன்ற படபடப்பு.

கேட்கத்தான் நேரம் இருக்காது எனக்கு.இந்த விடுமுறையில் அங்கு சென்று கரையோரமாய் அமர்ந்தேன்.


அந்த ஆறு கதை ஒன்று சொன்னது என்னிடம்.பழங்கதை அந்த ஊரில் நடந்த கதை.

ஆறு சொன்னது " ஊர் ஒர எல்லையில் நான் வாழ்கிறேன்.யாரும் என்னை போற்றுவதும் இல்லை.

தூற்றுவதும் இல்லை.

ஆனால் அவர்கள் வருவார்கள்.என் கரையோரமாய் அமர்வார்கள்.அதிகம் பேசுவதில்லை,பேசினாலும் கவிதையாகவே

இருக்கும்.பெரும்பாலும் கண்களே பேசும். அவர்கள் வருவதை நான் முன்னமே அறிவேன்.

அவள் வருவதை " கொலுசு " அறிவிக்கும்.

அவன் வருவதை "புல்லாங்குழல்"ஓசை அறிவிக்கும்.

அவன் அதிகமாய் புல்லாங்குழல் மீட்பதில்லை.ஆனால் வாசித்தால் அவளும் ,நானும் விரைவில் மயங்கி விடுவோம்.

அதிகமாய் வளர்பிறை நாட்களில் தான் வருவார்கள்.கரையோர மணல் மேட்டில் அமர்ந்து விளையாடுவர்.

அவள் கலகலவென சிரிப்பாள்.அது என் சலசலப்பையும் மீறி விடும். அவன் புல்லாங்குழலோசை திடீரென்று நின்று விடும்.

ஏன் என்று எட்டிப்பார்த்தால் அது அவள் கால் கொலுசுகளை வருடிக்கொண்டிருக்கும்.

அவர்களுக்கு தெரியாது என்னுள் இருக்கும் மீன் கூட்டம் அவர்களை ரசிப்பதை.

எப்போதாவது கவிதை கூறுவான் அவளிடம்.ஒரு முறை சொன்னான்

"நீ என்றோ பூக்கும் குறிஞ்சியல்ல! நீ என்றும் என் மனதில் பூக்கும் சூரியதாமரை.நம்மை யாரும் பிரிக்க முடியாது... நிரந்தரா, நாம் நிரந்தரமானவர்கள்!!"

எனக்குள் ஏக்கம் அவன் காதலியாய் பிறக்கவில்லையே, அவளை போல் கவிதை அவனிடம் கவிதை பெற.சில நாட்கள் அவர்களை காணவில்லை.மீண்டும் பௌர்னமிக்கு சில நாட்கள் இருக்கையில் அவர்கள்.அவன் "நம் கலப்பு மனத்தை இவ்வூரார் ஏற்கவில்லை என்றால்?" வினவினான்.வினா கேட்ட அவள் கண்களில் கண்ணிர்.என் தண்ணிரிலும் கலந்தது.அன்று என் அருகில் வந்து அமர்ந்திருந்தார்கள்.நான் அவர்களின் கால்களின் மேல் ஒடி, என்னை நானே கழுவி கொண்டேன்.


நிலவொளி அவர்களை பிரகாசித்தது.நிரந்தரா நிலவை போல நிறைந்திருந்தாள்.சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள்.அன்று நான் மூன்று நிலவுகளை நான் கண்டேன்.அவர்கள் என்னை என் கரையோரமணல் மேட்டில் அமர்ந்து என் மறுகரையோர தென்னை மரத்தில் இருந்த இரு பெண் புறாக்களை இரசித்தபடி. ஆனால் மரத்தின் அடியில் இருந்த மனித மிருகங்களை கவனிக்க தவறி விட்டனர்.


மறு நாள் இரவு அவர்கள் சந்தித்த போது அவர்களை சுற்றி மனித மிருகங்கள்.பல விவாதங்களுக்கு பிறகு செய்வதறியாது, பின்னி பினைந்தனர்.அதிர்ந்த மிருகங்கள அவர்கள் மீது எண்ணை ஊற்றி நெருப்பு வைத்தனர்.எதிர்ப்பே இல்லாமல் எரிய தொடங்கினர்.இரவில் என் கரையில் எரியும் முழு நிலவாய் அவர்கள்.அய்யோ!குளிர்மை இழந்து நான் கொதித்து போனேன்.எரிந்த அவர்களின் சாம்பலை ,என்னிடமே கரைத்தார்கள் "


கதை கூறி முடித்த ஆறு சலசலத்தது.

கதை கேட்ட என் கண்களில் கண்ணிர் துளிகள்

மேகம் கூட தன் பங்குக்கு மழையாய்...

அவனையும் , நிரந்தராவையும் என் நினைவில் நிறுத்தினேன்.

புனித ஆற்றில் நீராட ஆடைகளை களைந்து விட்டு

ஆற்றை நோக்கி நடந்து சென்றேன்.

Saturday, July 18, 2009

நீ - நான்

நீ பேசினாய்
நான் குரலானேன்!

நீ சுவாசித்தாய்
நான் காற்றானேன்!

நீ அழுதாய்
நான் கண்ணீரானேன்!

நீ பாடினாய்
நான் கவிதையானேன்!

ஆக "நீ" என்றும் "நீயாக"வே
இருக்கிறாய்
ஆனால் "நான்" தான் "நீயென்று"
இருக்கிறேன்.

Thursday, July 16, 2009

மரங்கொத்தி

மூங்கில் காட்டில்
மரங்கொத்திகளுக்கு என்ன வேலை?
புல்லாங்குழல் செய்கிறதா?!!

துளிகள்

தூரத்தில் பறந்து வந்த மேகம்
பெய்து கொண்டிருந்த மழையோடு நனைந்து,
அழகாக கலைந்து பெய்தது.
சாரலின் மோதல் தவிர்க்க
சற்றே கதவு திறந்து உள்ளே நின்றேன்.
அழுத்தமான காற்று....!
என்னையும் மீறி வீட்டின் உள்ளே.
கதவு ஜன்னல் படபடக்க
அங்கும் காற்றின் பிரவேசம்.

மழை நின்று முடிந்ததும்
மனநிறைவாய் வீட்டுக்கதவு அடைத்தேன்.
ஜன்னலில் வழிந்த நீர்த்துளிகள்,
மேஜையின் மேல்
அவளை பற்றி எழுதிய
கவிதைகளில் விழுந்திருந்தது.

ஆம்!
என் காதல் கவிதைகள்
நீலக்கண்ணீரோடு
நிறம் மாறி அழுது கொண்டிருந்தது...........

Monday, July 13, 2009

வேகம்!!?

நிலவை துரத்தி துரத்தி காதலித்தன,
நட்சத்திரங்கள். சில சமயம் பூமியில்
விழுவது கூட தெரியாமல்!!

பாலம்


மனிதர்களுக்கு உதவியாய்.
ஆற்றின் பயணத்தில்
இடைஞ்சலாய்.

Sunday, July 5, 2009

புதிர்

சுதந்திரமாய் நீ,
செயற்கை செடி கொடிகளுடன்
வண்ண உருண்டை கற்களுடனும்.
அங்கும் இங்கும்
உன் நன்பர்கள் கூட்டத்துடன்
நீ உல்லாசமாய் நீந்தியபடி.
கால தாமதம் இன்றி
உன் பசியறிந்து உணவுடன் நான்.
மின் விளக்கு ஒளியில்
மினுமினுப்பாய் நீ.
உன் கோட்டை மதில் சுவராய்
என் வீட்டுக்கண்ணாடி தொட்டி.
சில சமயம்
சாய்வு நாற்காலியில்
அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.
புதிராய் இருக்கும்!!
தங்க மீன் குட்டியே,
வேடிக்கை பார்ப்பது
நான் உன்னையா?
அல்லது, நீ என்னையா??!!