Thursday, December 16, 2010

கதை சொல்லும் .............!

"பள்ளியில் கிறுக்கி 
மதிப்பெண் இட்டு 
விடைத்தாள் என்றாய் 
உன் வினாத்தாளும் நான் தானே ?
கவிதைகள் எழுதி 
காதல் கடிதமாக்கினாய் 
உன் கனவுகள் சுமந்தேன் 
என்னை வண்ண கலவையில் 
நனைத்து  ரூபாய் என்றாய் 
நம் இருவர் நிம்மதியும் 
அறவே போனது 
முத்திரை குத்தி
பத்திரம் ஆக்கினாய்
பாதுகாப்பதே பெரும்பாடானது .
காகிதம் கடைசியாய் சொன்னது 
எப்போது என்னை கசக்கி 
கூடையில் எறிவாய்
காத்திருப்பேன் விடுதலைக்காக..."

Thursday, December 9, 2010

மழைக்காலம்

பள்ளி செல்லும் வழியில் 
சேற்றில் கால் வைக்காதே
அம்மா கத்தினாலும் 
உள்மனம் அழுக்கு பட 
ஆசையோடு ஓடி ஓடி 
மிதித்து குதிக்கும்
வேகமாய் முதுகில் தாளமிட்டு 
என்னை ஒப்பாரி பாட செய்து
இழுத்து செல்வாள்
வெறுங்காலில் அனைத்தையும் 
மிதித்து நடந்தபடி .
என் பள்ளி சுமை 
அவள் இடுப்பில்
ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் 
கருமேகம் சத்தமிட்டு 
சிதறிய மழைத்துளிகள் 
வேகமாய் எனை 
நனைக்க உடனே 
அம்மா குடை விரித்தாள்
புடவை தலைப்பினிலே ...! 
என்னை நனைத்தால் 
அன்பு மழையினிலே..!!
புரியாத வயதில்
ஏதேதோ செய்தாய் 
எல்லாம் புரிந்த போது
எனை விட்டே போனாய் .
ஒவ்வொரு  மழைக்காலமும்
உனை தூறியே செல்லும் ...!

Thursday, November 11, 2010

மிருதுளா எழுதிய கவிதை:

என் பெயரை நீ
உச்சரிக்கும் போதுதான்
நிஜமாகவே ரசித்தேன்


நட்பு முகமூடி அகற்றி 
நேசம் கொண்டோம் 


என் சுவாசத்தை நேசமாக்க
சொல்லி தந்தாய்
என் கைகளுக்கு கவிதை
எழுத கற்றுகொடுத்தாய்
என் கனவுகளை
கொள்ளையடித்தாய்
உன் பார்வைகளில் 
என்னை அழகாக்கினாய்
மென்மையாய் என் பெண்மை 
உணர்த்தி உண்மையாய் 
என்னையே சுவாசித்தாய் 
என் உலகம் முழுக்க 
நீக்கமற நிறைந்தாய் 


போதுமடா  மறு பிறவிகள்
வேண்டாம்..
போதும் உன் அனைப்புகளின்  
கதகதப்பு ... 
                           இப்படிக்கு 
                             உன் மிருதுளா  

Wednesday, October 27, 2010

மௌனம்

சந்தர்ப்பம் மிக புத்திசாலி
கோபமும் அமைதியும் 
அதன் ஆயுதங்கள் 
நிகழ்வுகள் தொடங்கியதும் 
சகமனித முகங்கள்
மேடையேறி சிரிக்கும் அல்லது 
திரையிட்டு மறையும் 
கைகள் மாலை தேடும் 
அல்லது சவுக்கெடுக்கும்
வார்த்தைகள் 
நிறம்  மாறும் 
உறவாடும் அல்லது 
கழுத்தறுக்கும் 

தப்பிக்கும் வழி ஒன்று தான் 
மௌன சாவி கொண்டு 
புத்தியை விடுதலை செய் 
கேள்விக்குறிகளை தட்டி நிறுத்து 
அவை ஆச்சர்யமாய் மாறி 
நம் கை கோர்க்கும் 
பாராட்டுக்கும் பழிக்கும்
மௌனம் மட்டுமே 
பதிலாகும் எனவே 
அதிகம் நீ மௌனி !!

Sunday, September 26, 2010

அமைதி

வகுப்பறையில் உரத்த குரலில் 
ஆசிரியர் கூச்ச்சலிட்டு  தேடுவர் 
"அமைதி  , அமைதி!"
அன்று அவரை 
வேடிக்கை பார்த்து 
சிரித்தேன் இன்று 
வாழ்க்கை முழுதும் 
தேடி அலைகிறேன் 
எங்கும் காணமல் 
தவிக்கிறேன் 

Tuesday, September 7, 2010

தோழி

இனையம்
நம்மை 
இணைத்தது
உன் முகம் பார்க்காமல்
தொடங்கிய நட்பு
இன்று நம் முகவரிகள்
கூட மனனமானது


விருப்பம் விடுகதை
கவிதை கதை
பரிசுகள்
பகிர்ந்தோம்
கண்ணியமாய்
கைகோர்த்து நடக்கிறோம்
நட்பின் எல்லைகளில்


என்றோ ஒருநாள்
முகம் சந்திப்போம்
அட! 
பேச ஒருவிஷயம்
கூட இல்லாமல்
சத்தமிட்டு சிரிப்போம்:)

Wednesday, August 25, 2010

நாட்டுப்பற்று

உதிர்ந்த பூக்கள்
சில்லரை மிட்டாய்கள்
தூக்கம் கலையாத
கை தட்டல்கள்
வாய் நிறைய
வாக்குறுதிகள்
இவையெல்லாம் பொய்யென‌
கோபித்து
உயரச்சென்று பறக்குது
நம் தேசியக்கொடி
கொண்டாடப்பட்டது
மீன்டும் ஒரு
சுதந்திரதினம்

Friday, August 13, 2010

மிருதுளா : சிறுகுறிப்பு


எச்சரிக்கும் 
உள்மனம்
உதடுகள் முத்தமிட்டு
உச்சரிக்கும் பெயர்
இது என்று ஆனால் 
என்று உனை கண்டேனோ -
நழுவும் மேலாடை 

இறுக்கி பிடித்து 
சரியும் கேசம் ஒதுக்கி 
பூக்களை உதிர்த்த 
மரத்தடியில் உன் விரல் 
நுனிகள் பூ சேர்த்த பொழுது 
அன்பே மிருதுளா ...!!
அன்றே 
நானும் உதிர்ந்தேன் 
சருகானேன் 
என்னை உன் 
பாதங்களிலாவது 
மிதித்து போ !!

Wednesday, July 28, 2010

வழிகாட்டி

மனிதர்கள் அற்ற 
வளைவு நெளிவு சாலையில் 
நம் முதல் பயணம் 
குழப்பவே செய்யும் 
முச்சந்திகளும் நான்குசாலை 
முத்தசந்திப்புகளும் 
கேள்விகுறியில் நிரம்பி வழியும் 
புத்தி சக்தியற்று 
நிற்கும்போது சத்தமில்லாமல் 
எங்கிருந்தோ வரும் 
ஒரு மூதாட்டியோ 
வீடு திரும்பும் பள்ளி சிறுவனோ 
மிதிவண்டி வழிவரும் 
யாரோ ஒருவரோ 
வழி சொல்லி செல்வர் 
நமக்காகவே வந்த
வழிகாட்டிபோல
இந்த முகங்கள் சில 
நினைவில் தொலைய மறுக்கும் 
நான் வழிகாட்டிய 
சிலரேனும் என்றாவது 
என் முகம் நினைப்பரோ ???

Wednesday, July 21, 2010

குறுந்தகவல்

பின்னிரவு அமைதியை கலைத்தபடி 
நீண்ட இடைவெளிக்கு பிறகு
நீ அனுப்பிய குறுந்தகவல் 
பார்த்து என் கைபேசி 
என்னை சத்தமிட்டு அழைத்தது
பொழுதுகள் புரியாத கருவி
என்னை விட்டு
நீ பிரிவதை 
உன் ஆங்கிலம் 
சுருக்கமாய் சொன்னது
வருத்தப்பட நேரமே 
கொடுக்காமல் அடுத்து வந்த 
நண்பனின் நகைச்சுவை 
வாழ்க்கை வேகமாய் 
போவதை நம்மை விட 
நம் கைபேசிகள் புரிந்து கொண்டன  
Thursday, July 15, 2010

மேகங்களின் இடையே

மேகங்களை கலைத்து
சந்தோஷபட்டது காற்று 
விருப்பமான கனவு 
கலைந்தது போல் பாரம் 
தொலைந்த பொம்மை 
தேடும் குழந்தையாய்
வானவீதியில் தேடி நடக்கிறேன்
வழியில் தட்டுபட்டது 
கலைந்த மேகங்களின் இடையே 
மிதந்து வந்த 
சில பறவை இறகுகளும்... 
முகத்தில் மோதிய 
சில மழைதுளிகளும்...
வருத்தமாய் திரும்பும் பொழுது
மேகங்கள் மீண்டும்
இணைய தொடங்கின 
ஓவியங்கள் பல உயிர் வந்து
ஓட தொடங்கின !