Friday, April 23, 2010

அடுத்தமுறை கவனிக்க சில

ஆதியும் அந்தமும் இல்லாத 
வரிசை கோடுகளில் எறும்பு
சொல்லும் ஒழுக்கமும் நேர்த்தியும் 

ஈரபசை காற்றோடு மோதும் 
மண்வாசம் சொல்லும் நெருங்கி 
வரும் மழையின் வருகையை 

பேருந்து பயணத்தில் தாயின் 
தோளில் இருந்து சினேகபுன்னகை
உதிர்க்கும் பிஞ்சுகுழந்தை 

பள்ளி வாசலில் கலங்கி செல்லும்
அம்மாவும் கையசைத்து உள் ஓடும்
புத்தகபை சுமைதாங்கியும்

தூரத்து பயணத்தில் தூங்காமல் 
கண்மூட  காதுக்குள் தாளமிடும்  
பிரியமான இசையொலி  

பிடித்தமான கோயிலில் 
ஆழமான அமைதியில் திடீரென 
கேட்கும் கோயில் மணியோசை 

திருவிழா சலசலப்பு முடிந்த காலி   
மைதானத்தில் குதித்து விளையாடும் 
ஆட்டு குட்டிகள் சில 

 சுவாசிப்பது மட்டும் அல்ல 
 நேசிக்கவும்  நிறைய கொட்டி கிடக்குது
 நம்மை சுற்றி ,காற்று போல் கலந்து! 

Tuesday, April 20, 2010

நிரந்தரம்

நண்பன் கைதொட்ட கல்
நெற்றியில் இட்டது
மிதிவண்டி பழகி
கால்விரல் நுனிகளில்
காத்திருப்பின் உச்சத்தில்
கைகிழித்து உதிரம்
வழிந்த கோடுகள்
வலிகள் நாட்களில் உடலில்
வடுவாய் மாறியது.

ஆனால் உன் உதடுகள் உதிர்த்த‌
"பிடிக்கலைன்னு சொன்னேனா?"
" நீ தான்டா எல்லாமே"
"சொல்லாம போடா"
"தூங்க வைடா என்னை"
"பிரிஞ்சாலும் நினைப்பியா?"
"வீட்டில சரின்னு சொல்லனும்..."
"முடியாதுன்னு தோனுது.."
"இனி பார்க்க வராதே என்னை!"
"ஜூன் - 5 எனக்கு கல்யாணம்"

எல்லாம் தழும்புகள்
என் இதயத்தில்

Monday, April 12, 2010

நீயும் நானும்...

உன்னிடம் சண்டையிட ஆசை
ஆனால் நீ விழிகளிலேயே
சமாதானம் பேசுவாய்

உனக்காக காத்திருக்க ஆசை
ஆனால் எனக்கு முன்னமே நீ
பூத்திருக்கிறாய்

உனக்கு பிடித்ததை பரிசளிக்க ஆசை
என்ன செய்வது?என்னைதானே
உனக்கு மிகவும் பிடிக்கும்

உன்னை மிக நேசிப்பதாய் நினைப்பேன்
ஆனால் நீ என்னையே
முழுவதுமாய் சுவாசிக்கிறாய்!!

Sunday, April 11, 2010

.............. உனக்காக காத்திருக்கிறேன்

காத்திருப்பது வலியா? சுகமா?
எப்போது வருவாய்?
எங்கிருந்து வருவாய் ?
என்பது தெரியவில்லை
என் உறவுகள் உணர்வுகள்
எல்லாம் ஊடுருவி எளிதாய்
கலந்தவள் நீ
பிரிவது போல் பிரிந்து
பரிவாய் எனை பற்றுவாய்
உன் சங்கமத்தில் நான்
ஆனந்தம் கொள்கிறேன்
என் தனிமையில் நான்
எதையோ தொலைக்கிறேன்.
நினைவுகள் வலிக்கிறது
மேலும் எனை சோதிக்காதே
விரைவாக வா
எனக்கான கவிதையே

Sunday, April 4, 2010

உயர்திரு தமிழய்யா அவர்களுக்கு

"பயலே, கையெழுத்தை மாத்து
உன் தலையெழுத்து மாறும்"
அன்றே ஆருடம் சொன்னார்
மதிப்பென் குறையும்போது
பிரம்போடு அய்யனாராய் நிற்கும்
மதிப்பிற்குரிய தமிழய்யா.

தாய்க்கு நிகராய்
தாய்மொழி தந்தார்
தமிழில் கதை கவிதை
தரமான காவியம் தன்னிகரில்லா
தமிழ் இலக்கியத்தோடு
தமிழர்தம் வாழ்வியல் என்று
தனித்தனியே தமிழ் விதைத்தார்
இன்று அவ்விதைகளை
விளைவிக்கிறேன்
தமிழ் கவிதைகளாய்

வாழ்க்கை பயணத்தின் நீண்ட‌
இடைவெளியில் விழைகிறேன்
மீண்டும் உங்கள் வகுப்பறையில் நின்று
சத்தமாய் நான் உரைநடை படிக்க‌
வழக்கம் போல் நீங்கள் விளக்க வேண்டும்
உங்கள் தொலைந்த பிரம்பிற்க்கும்
எனக்கும் தொடர்பில்லை
என்பதை நினைவில் கொண்டு.
தமிழய்யா
உங்கள் நினைவுகளுக்கு
இந்த கவிதை ஒரு மலர்சென்டு...

Thursday, April 1, 2010

பூமியை காப்பாற்ற யாருமில்லையா?

ஓசோனில் பெரிதாகும் ஓட்டை
உருகும் பனிக்கட்டிகள்
உயரும் கடல் மட்டம்
அலறியடித்து உலகதலைவர்கள்
ஜெனிவாவில் கூட்டம்
தீர்மானம் போட்டு தீர்வு
கண்டதாய் உலகமக்களும் ஏமாறும்.

பூமியை காப்பற்ற
சிலமணி நேரம் விளக்குகள்
அனைத்து விளையாடுது ஒரு கூட்டம்

வீட்டுக்கூரையில் தீப்பிடிக்க‌
தீயனைக்க வீட்டுக்குள்ளே
தீர்மானம் போடுது ஒரு கூட்டம்

கோமாளிகூத்துகள் பார்த்து
சூடாய் சிரிக்குது சூரியன்
தவித்து சுற்றுது நம் பூமி